இந்த ஆண்டு ப்ளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் தமிழகம் முழுவதும் கடந்த 2017-18 காலகட்டங்களில் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என மாணவ, மாணவிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகிறனர்.
இந்நிலையில், ஈரோட்டில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் கண்காட்சியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு வழங்கும் மடிக்கணினி குறித்து பேசினார். அப்போது பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டங்களை படிக்க 240 நாட்கள் தேவைப்படும் நிலையில் குறைவான வேலை நாட்களே உள்ளதால் முன்னுரிமை அளித்து தற்போதைய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் 2017-18 ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குப் பிறகு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு ப்ளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.