சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கௌரி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார்.
சமீபத்தில் கர்நாடகா, அலகாபாத் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்த நிலையில் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விக்டோரியா கௌரி நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தது.
ஆனால் வழக்கறிஞர் விக்டோரியா கௌரி பாஜக-வின் மகளிரணியின் மகிளா மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக இருந்திருக்கிறார் என்றும், சமூக வலைதளங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரசாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்களைச் செய்ததாகவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் விக்டோரியா கௌரியின் நியமனத்தை திரும்ப பெறக்கோரி குடியரசுத் தலைவருக்கு கூட்டாக கடிதம் எழுதியிருந்தனர்.
இதனிடையே மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், விக்டோரியா கௌரியின் நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வில் முறையிட்ட போது, வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார்.