தமிழ்நாடு

பிளாஸ்டிக் கழிவில் தரமான தார்ச்சாலை: அசத்தும் சுய உதவிக்குழுக்கள்

பிளாஸ்டிக் கழிவில் தரமான தார்ச்சாலை: அசத்தும் சுய உதவிக்குழுக்கள்

webteam

பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடையும் சுற்றுசுழல் பாதிப்பை தவிர்க்க, பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மறுசுழற்றி மூலம் பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்க மூலப்பொருள் தயாரித்து சில மகளிர் சுயஉதவிக் குழுகள் வருவாய் ஈட்டி வருகின்றன. 

மதுரை நாராயணபுரம் மற்றும் ஆத்திகுளம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மதுரை பேங்க் காலணியில் 2004 ஆம் ஆண்டு முதல் மகளிர் சுயஉதவி குழு அமைத்து பெண்களுக்கு தையல் பயிற்சி, உறுகாய் தயாரித்தல் மற்றும் பயிற்சி வழங்குதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட சமூகப் பணிகள் செய்து வருகின்றனர். 

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 40 முதல் 60 மைக்ரான் கொண்ட மக்காத பிளாஸ்டிக் பை, பேப்பர்களை சேகரித்து, அதனை மறுசுழற்றி முறையில் பிளாஸ்டிக் தார்சாலை அமைப்பதற்கான மூலப்பொருளை தயாரிக்கும் பணியில் சுதேசி மகளர் குழு பெண்கள் மற்றும் பவளமல்லி மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் 8 பேர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக முறையாக பயிற்சிப் பெற்று மகளிர் திட்டத்தின் கீழ் வங்கியில் 2.75 லட்சம்  கடன் உதவி பெற்று பிளாஸ்டிக் பேப்பர்களை தூசிகளை அகற்றி அறைக்கும் இரண்டு இயந்திரங்கள் வாங்கியுள்ளனர். 

பின்னர் தங்கள் பகுதியிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து, அவற்றை தரம் பிரித்து அறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தரம் வாரியாக ஒரு கிலோ 6 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை வழங்குகின்றனர். பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்றி செய்து அறைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு இந்த மகளிர் சுய உதவி குழுவினர் விற்பனை செய்கின்றனர்.