தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, மதிய உணவு வாங்க அடுக்கு தூக்கு பாக்ஸ் இலவச சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தடுக்க பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்பு முகப்பில், மதிய உணவு பார்சல் வாங்க வெளியில் செல்பவர்கள் உணவினை பிளாஸ்டிக் பைகளில் வாங்குவதை தவிர்க்கும் பொருட்டு, இலவசமாக அடுக்கு தூக்கு பாக்ஸ் வழங்கும் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு 4 அடுக்குள்ள சிறிய மற்றும் பெரியளவிலான 15 தூக்கு பாக்ஸ்கள் புதியதாக வாங்கி வைக்கப்பட்டுள்ளது. உணவு வாங்க வெளியே செல்பவர்கள் முன் தொகையாக ரூ.100 செலுத்திவிட்டு, பெயர், அலுவக விவரம், அழைபேசி எண்ணை பதிவு செய்துவிட்டு தூக்கு பாக்ஸை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து உணவு உண்டபின் தூக்கு பாக்ஸை சுத்தம் செய்து, மீண்டும் ஒப்படைத்து விட்டு தாங்கள் செலுத்திய முன் தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம். தொடர்ந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு, இந்த சேவை குறித்த நிறை, குறைகளை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று சேவை தொடங்கியவுடன் 3 அலுவலர்கள், இந்த சேவையை பயன்படுத்தினர். இந்த சேவை தினமும் ஒரு பணியாளரை கொண்டு 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இந்த சேவை மூலம் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்திற்கு வரும் அலுவலர்கள், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றுலும் தவிர்க்க விழிப்புணர்வு முடியும். இது தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் பெ.அமுதா அறிவுறுத்தலின்படி தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
தகவல்கள் : சே.விவேகானந்தன் - செய்தியாளர்,தருமபுரி