தமிழ்நாடு

‘நன்றி.. நன்றி’ - 31 ஆண்டுகால சிறைக்குப் பின் பிணையில் வந்தார் பேரறிவாளன்

‘நன்றி.. நன்றி’ - 31 ஆண்டுகால சிறைக்குப் பின் பிணையில் வந்தார் பேரறிவாளன்

நிவேதா ஜெகராஜா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு கால சிறை தண்டனைக்குப் பிறகு பிணை கிடைத்ததையடுத்து, இன்று புழல் சிறையிலிருந்து பேரறிவாளன் வெளியே வந்திருக்கிறார். 'அனைவருக்கும் நன்றி.. நன்றி ' எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார் பேரறிவாளன்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் கடந்த ஒன்பது மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளன், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜாமீன் வழங்கப்பட்டதால் கடந்த 11-ம் தேதி புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவு சிறை அலுவலகத்திற்கு வரவில்லை எனக் கூறி மீண்டும் ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜாமீன் பெறுவதற்காக இன்று காலை 6.30 மணிக்கு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களை கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சென்ற அவர், தற்போது சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளார். தனது மகனின் இந்த பிணை குறித்து மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பேசிய அவரது தாயார் அற்புதம் அம்மாள், “நீதிக்கான 31 ஆண்டுகால நீண்ட போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலகட்டம் இது. `விடுதலை’ என்ற முழுமை நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்லை என்ற நிலையில் கிடைத்திருக்கிற இந்த பிணை, ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என் மகன் உட்பட அனைவரும் முழுமையான விடுதலையை பெறுகின்றவரை, உங்கள் அனைவரின் ஆதரவு அவசியமிருக்கும் என்ற நம்பிக்கையோடு எங்கள் போராட்டம் தொடர்கிறது. எங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு துணை நிற்கும் முதல்வர், தமிழக அரசு, எதிர்க்கட்சி தலைவர், அனைத்து அரசியல் கட்சியினர், அமைப்பினருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். என் மகனின் உண்மை நிலையை உணர்ந்து இத்தனை ஆண்டுகள் ஆதரவு தந்த எங்களுக்கு துணையிருந்த வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் அனைவருக்கும் நன்றி.

தமிழகத்திலும், தமிழகம் தாண்டியும் உள்ள வெகுமக்களின் ஆதரவும் புரிதலுமே 31 ஆண்டுகளுக்கு பிறகாவது இந்த நிலையை எட்டக்கூடிய வாய்ப்பை எங்களுக்கு தந்துள்ளது. அனைவரையும் தனித்தனியே சந்தித்து நன்றி கூற விருப்பம் இருப்பினும், தற்போது அது சாத்தியமற்றது. முழுமையான விடுதலை கிடைத்து அதற்கான சூழல் ஏற்படும் நாளில் விடுதலைக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லும் வாய்ப்புக்காக நானும் மகன் அறிவும் காத்திருக்கிறோம். எனவே தற்போது தற்காலிகமாக கிடைத்துள்ள இந்த இடைக்கால பிணையின்போது அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பிணை கிடைக்க காரணமான அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி” எனத் தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து பேசிய பேரறிவாளனும், எல்லோருக்கும் நன்றி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அவர்களின் பேட்டியை, வீடியோ வடிவில் இங்கு காண்க: