தமிழ்நாடு

போலி மருத்துவரிடம் சிகிச்சை: டெங்கு பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

போலி மருத்துவரிடம் சிகிச்சை: டெங்கு பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

webteam

பெரம்பலூர் அருகே டெங்குவால் மாணவி உயிரிழந்ததற்கு போலி மருத்துவர் சிகிச்சை அளித்ததே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அம்மாபாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் 12 வயது மகள் தனபாக்கியத்திற்கு காய்ச்சல் ஏற்பட்டது. அங்குள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நிலையில், காய்ச்சல் அதிகரித்ததால் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு‌ தனபாக்கியத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். மாணவியின் உடல் நேற்றிரவே அவசரமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக அரசு மருத்துவமனை இணை இயக்குநர் செல்வராஜிடம் கேட்டதற்கு, அந்த மாணவிக்கு டெங்கு இல்லையென மறுப்பதற்கில்லை என்றும், அரசு மருத்துவமனைக்கு‌ அழைத்து வருவதற்கு முன்பு அவருக்கு சிகிச்சை அளித்தது, போலி மருத்துவர் என்றும் தெரிவித்தார். போலி மருத்துவர் ரவி, இரண்டு முறை கைது செய்யப்பட்டும், மீண்டும் மருத்துவம் பார்ப்பது எப்படி என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில், போலி மருத்து‌வர் ரவி மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.