போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான இடங்களில் இன்றும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8ஆவது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஏதும் ஓடவில்லை. எனவே பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் வழக்காக வாங்கும் கட்டணத்தை விட அதிகக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஆகவே மக்களுக்கு கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நாய் வண்டியில் அழைத்து செல்லப்படுகின்றனர். பொதுமக்கள் நாய் வண்டி என்றும் பாராமல், அதில் கட்டணம் கொடுத்து பயணம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் நாய் வண்டியில் அவசர அவசரமாக ஏறிச் செல்லும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதனை நெட்டிசன்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, “ தமிழ்நாட்டில் இது மட்டும்தான் நடக்காமல் இருந்தது. அதுவும் இப்போது நடந்தேவிட்டது ” என வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.