இறுதி ஊர்வலம் PT Desk
தமிழ்நாடு

ரயில் பாதையா.. சுடுகாட்டுப்பாதையா? தண்டவாளத்தில் திக் திக் இறுதி ஊர்வலம்

சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால், தண்டவாளத்தில் மரண பயத்துடன் இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் செய்யும் அவல நிலை.. 10 ஆண்டுகளாக தொடரும் துயரம்

யுவபுருஷ்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பெ. கொள்ளாத்தங்குறிச்சி கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்ட சுடுகாட்டுக்கு முறையாக வழியில்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிக ஆபத்தான முறையில், சென்னை- திருச்சி ரயில் மார்க்கத்தின் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இறந்தவர்களின் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

100 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேலாக வரும் வந்தே பாரத் ரயில், தேஜாஸ் அதிவிரைவு ரயில், பல்லவன் மற்றும் வைகை அதிவிரைவு ரயில்கள், சரக்கு ரயில் இந்த மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.

இதனால் தண்டவாளத்தில் சடலத்தை கொண்டு செல்லும்போது, ரயிலை பார்த்து தண்டவாளத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழலும், அதற்குள் விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இந்த நிலையில், கோவிந்தசாமி என்னும் முதியவர் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.

அவரது சடலத்தை தூக்கிச் செல்லும்போது ரயில் வந்ததால் இறுதி சடங்குக்கு வந்தவர்கள் சடலத்துடன் தண்டவாளத்தை விட்டு வெளியேறி உயிர் பிழைத்தனர். பின்னர் ரயில் சென்றவுடன் மீண்டும் ரயில் பாதையில் இறுதி சடங்கு ஊர்வலம் தொடர்ந்தது.

அதனைத்தொடர்ந்து, கோவிந்தசாமியின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், ஆபத்தான முறையில் நடக்கும் இறுதிச்சடங்கு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. உயிர் இருக்கும்போதுதான் பல பிரச்னைகள் என்றால், இறந்தவர்களை தகனம் செய்யவும் இப்படி ஒரு அவல நிலையா என்று வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், உடனடி நடவடிக்கை தேவை என கோரிக்கை வைக்கின்றனர்.