தமிழ்நாடு

ஜடாயு தீர்த்த படித்துறையில் தொடரும் உயிரிழப்புகள் - கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?

ஜடாயு தீர்த்த படித்துறையில் தொடரும் உயிரிழப்புகள் - கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?

Sinekadhara

நெல்லை மாவட்டம் அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் 10க்கும் மேற்பட்டோர் ஆழம் தெரியாமல் இறங்கி உயிரிழந்திருக்கிறார்கள் என்பதால் இங்கு எச்சரிக்கை பலகை வைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தாழையூத்து பகுதிக்கு அடுத்ததாக அருகன் குளம் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான பிண்டராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வேண்டிக்கொண்டு, இறந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, ஜடாயு தீர்த்தம் தாமிரபரணி ஆற்றில் குளித்தால் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக திருநெல்வேலி, கோவில்பட்டி விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் மதுரை வரை உள்ள மக்கள் திதி தர்ப்பணம் செய்வதற்காக இங்கு வருவது வழக்கம்.

 அதேபோல் கோவில்பட்டியில் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை நடத்திவரும் குமார் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்த தன் உறவினருக்காக திருநெல்வேலியில் உள்ள அருகன்குளம் பிண்டராமர் கோயில் ஜடாயு தீர்த்த படித்துறை பகுதியில் திதி கொடுத்துவிட்டு உறவினர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளித்துள்ளார். அப்போது தவறுதலாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். ஆழத்தில் சிக்கியவரை நீச்சல் தெரியாத மற்ற உறவினர்களும் காப்பாற்ற முடியாமல் தவிக்க, குமார் ஆற்றில் மூழ்கி விட்டார்.

உடனடியாக தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க தீயணைப்பு படைவீரர்கள் ஆற்றுக்குள் 3 மணி நேர தேடுதலுக்குப் பின் குமாரின் உடலை மீட்டனர். உயிரிழந்த குமாரின் உடல் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உறவினரின் திதிக்காக வந்தவர், வந்த இடத்தில் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாமிரபரணி ஆற்றின் இந்த ஜடாயு தீர்த்த படித்துறையில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் 10க்கும் மேற்பட்டோர் ஆற்றுக்குள் மூழ்கி உயிரிழந்திருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனால் இதுவரை இதுகுறித்து ஒரு எச்சரிக்கை பலகைகூட இந்த ஆற்றங்கரையில் வைக்கப்படவில்லை என்றும், இனிமேலாவது அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பரிகாரம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் தங்கள் துணிகளை ஆற்றிலேயே விட்டுவிட்டு செல்வதாகவும், வெளியூரிலிருந்து குளிக்க வருபவர்கள் ஆற்றுக்குள் ஆழம் தெரியாமல் சென்று உள்ளே கிடக்கும் துணிகளில் கால் சிக்கி மூச்சுத்திணறி தண்ணீருக்குள் மூழ்கி இறந்து விடுகிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

அதேபோல் நீச்சல் தெரியாதவர்கள் பலரும் ஆழமான பகுதிகளில் சிக்கி உயிரிழந்து விடுகிறார்கள் என்றும், மேலும் சிலர் மது அருந்திவிட்டு குளிக்க வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்; அவர்களும் மதுபோதையில் ஆழமான பகுதிகளுக்குச் சென்று சிக்கி உயிரை இழந்து விடுகிறார்கள் எனவும் தெரிவிக்கும் இந்தக் கிராம மக்கள், தங்கள் கண்முன்னே ஆற்றுக்குள் மூழ்கிய பலரை காப்பாற்றிய சம்பவங்களும் அதிகம் நடந்துள்ளது என்கின்றனர்.

இனிமேலும் உயிரிழப்புகள் நடக்காமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும், தாமிரபரணி ஆற்றுக்குள் பரிகாரம் என்ற பெயரில் உள்ளே வீசப்பட்டு கிடக்கும் மக்களின் உடைமைகள் அனைத்தையும் ஆற்றில் இருந்து வெளியே அகற்ற வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பல் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த பிரச்னை மாவட்ட ஆட்சிய விஷ்ணுவிடம் கொண்டுசெல்லப்பட்டபோது, உடனடியாக அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

-நெல்லை நாகராஜன்