தமிழ்நாடு

இணையத்தில் தண்ணீருக்கு பதிவு செய்து கண்ணீருடன் காத்திருப்போர்

இணையத்தில் தண்ணீருக்கு பதிவு செய்து கண்ணீருடன் காத்திருப்போர்

Rasus

கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் சென்னை மாநகரில், மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க சென்னை குடிநீர் வாரியம், இணையத்தில் பதிவு செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால், அந்த வசதி மூலமாகவும் கூட தண்ணீருக்காக பதிவு செய்துவிட்டு மக்கள் கண்ணீருடன் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையே உள்ளது.

வரலாறு காணாத வறட்சி... பல அடி கீழே சரிந்த நிலத்தடி நீர்மட்டம்... வறண்டு போன நீர் ஆதாரங்கள் என தமிழகமே தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், குடிநீருக்காக தலைநகர் சென்னையும் தவித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக சென்னை குடிநீர் வாரியம் இணையதள சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளத்‌தில் பதிவு செய்து, தேவைக்கேற்ப பணம் செலுத்தினால் 6000 முதல் 9,000 லிட்டர் வரை குடிநீர் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருப்போருக்கு போதிய அளவு தண்ணீர் வருவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போது, நாளொன்றுக்கு ஒரு பகுதியிலிருந்து 750 முதல் 800 பேர் வரை குடிநீருக்காக பதிவு செய்வதாகவும், ஆனால் 250 முதல் 300 பேரின் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒருசிலர் இரண்டு மூன்றுமுறை பதிவு செய்வதால் அனைவருக்கும் தண்ணீர் தருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.