கூடலூரில் கடந்த 2 மாதத்தில் காட்டுயானை தாக்கி 6 பேர் உயிரிழப்பு. நேற்று காட்டு யானை தாக்கியதில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானை - மனித மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது. காட்டு யானைகள் தாக்கி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. கடந்த 2 மாதங்களில் கூடலூர் மற்றும் பந்தலூரில் காட்டு யானைகள் தாக்குதலுக்கு உள்ளாகி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஒரே வாரத்தில் காட்டு யானை தாக்கி 4 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
நேற்று பந்தலூர் அருகே உள்ள கொளப்பள்ளி, 10 லைன்ஸ் அரசு தேயிலைத் தோட்டக் குடியிருப்பு வசித்துவந்த கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகியோரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று காலை பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், உறவினர் வசம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே கூடலூரில் அதிகரிக்கும் யானை மனிதன் மோதல்களை அரசு மற்றும் வனத்துறை அதிகாரிகள் தடுக்கத் தவறியதாக குற்றம்சாட்டி நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமையில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பந்தலூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பந்தலூரில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 11 மணிக்கு துவங்கிய போராட்டம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, தொழிற்சங்க நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர். காட்டு யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நேரடியாக வர வேண்டும் உள்ளிட்ட 4 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
கோரிக்கைகளை ஏற்பதில் தாமதம் ஏற்பட்டைதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் வெளிநடப்பு செய்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். கோரிக்கைகளை ஏற்கும் வரை இறந்தவர்களின் உடலை பெற்றுச் செல்ல மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். தந்தை மகன் உயிரிழப்பு அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில் கூடலூரில் காட்டு யானை தாக்கி உயிரிழப்பவர்களின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக அரசு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் நிர்வாகம் செய்து கொடுப்பதில்லை.
கழிப்பிடம், சாலை தெருவிளக்கு வசதிகள் இல்லாதது அரசு தோட்டப் பகுதியில் யானை மனிதன் மோதல் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. எனவே அரசு மற்றும் அதிகாரிகள் கூடலூர் மற்றும் பந்தலூரில் யானை மனித மோதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனிடையே தந்தை மகனைக் கொன்ற காட்டு யானையை விரட்டும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பிட்ட யானையை வனப்பகுதிக்குள் விரட்ட ஏற்கனவே முதுமலையில் இருந்து வசிம், பொம்மன் ஆக இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் டாப்சிலிப்பில் இருந்து கலீம் என்கின்ற கும்கி அணையும் கொண்டு வரப்படுகிறது. 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளதால் குறிப்பிட்ட அந்த யானையை பிடித்து முகாமுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.