தமிழ்நாடு

உயிரிழந்த கோயில் காளைக்கு இறுதி சடங்குடன் நல்லடக்கம் செய்த 7 ஊர் கிராம மக்கள்

உயிரிழந்த கோயில் காளைக்கு இறுதி சடங்குடன் நல்லடக்கம் செய்த 7 ஊர் கிராம மக்கள்

நிவேதா ஜெகராஜா
பென்னாகரம் அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு 7 கிராம மக்கள் ஒன்றிணைந்த இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்திற்கு உட்பட்ட கரியம்பட்டி, செங்கனூர், உள்ளிட்ட 7 கிராமத்துக்கு தாய் கிராமமான நாயக்கனூர் கிராமத்தில், கோயில் கூலி (காளை) கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. இந்த காளை, வருடந்தோறும் 7 ஊர் சார்பாக நடைபெறும் எருது விடும் போட்டியில் முதன்மையாகவும் சிறப்பாகவும் பங்கேற்று வந்தது. அக்கிராம பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும் காளையான இதனை, கடவுளை வணங்குவது போல மக்கள் வணங்கி பாதுகாத்து வந்தனர்.
இதற்கு பொதுமக்கள் சார்பாக புல், தவிடு போன்ற தீவனங்கள், உணவுகள் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் இந்த காளை உடல்நலக் குறைவால் நேற்று திடீரென உயிரிழந்துள்ளது. இதனையடுத்து 7 ஊரை சேரந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காளைக்கு இறுதி சடங்குகள் மற்றும் மேள தாளத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து நல்லடக்கமும் செய்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பரப்பி, தங்களது மன வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.