சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 55 கலைக்கூத்தாடி குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கயிறு மீது நடப்பது, தெருக்கூத்து போன்றவை மூலம் கிடைக்கும் சிறு வருவாயை கொண்டு பிழைப்பு நடத்தி வரும் இவர்கள் சாதி சான்று, வீடு இல்லாமல் சிரமமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மானுடவியல் ஆய்வாளர்கள் மூலம் கலைக் கூத்தாடிகள், குஜராத் மாநிலம் தொம்ரா இன மக்கள் என்பதை கண்டறிந்தார். இதையடுத்து அவர்களுக்கு சாதிச் சான்று வழங்கினார். மேலும் சன்னதி புதுக்குளம் பகுதியில் 55 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பட்டா கொடுத்த இடத்தில் தற்போது 11 குடும்பங்கள் மட்டும் தற்காலிக வீடுகள் கட்டி தடுப்பாக சேலை, சாக்கு பைகளை கட்டியுள்ளனர். இதனால் மழை காலங்களில் சிரமப்பட்டு வருகின்றனர். மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் குழந்தைகள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கழிப்பறை வசதி இல்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், தமிழ் ஆகியோர் கூறியபோது, “வீடுகளின் மேற்கூரை மழை காலங்களில் ஒழுகுகின்றன. வீடுகள் கேட்டு தொடர்ந்து மனு கொடுத்து இருக்கிறோம். அதிகாரிகள் வீடு வரும் வரும் என்று சொல்லுகின்றனர். எங்கள் பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த குழந்தையை, மயானம் இல்லாமல் அடக்கம் செய்ய சிரமப்பட்டோம். பின்னர் அருகேயுள்ள கிராம மக்களிடம் பேசி அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்தோம்.
கழிப்பறைகள் இல்லாததால் கண்மாய் பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி சிரமங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.