திருச்சி திருவெறும்பூரில் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷாவுக்காக நீதி கேட்டு போராடிய 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. தனது மனைவி உஷாவுடன் திருச்சியில் உள்ள நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றிருக்கிறார். துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை மறித்துள்ளனர். வாகனச் சோதனையின் போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தை துரத்தி சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்திருக்கிறார். இதில் நிலைத்தடுமாறி உஷா மற்றும் அவரது கணவர் ராஜா ஆகியோர் இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்தனர். அப்போது தலையில் பலத்த காயமடைந்த உஷா நிகழ்விடத்திலேயே, கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷாவுக்காக நீதி கேட்டு போராடிய 23 பேர் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே உஷாவின் உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் காமராஜ் மீது கொலைவழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. மகளிர் தினத்தில் பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, தனது மனைவியின் உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யும் வரை மனைவியின் உடலை வாங்கப்போவதில்லை என அவரது ராஜா கணவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உஷாவின் உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காமராஜை வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.