சீர்காழி அருகே 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால துறைமுக நகரின் சங்ககால பெயரை மீட்டெடுத்த காவிரிப்பூம்பட்டினம் கிராம மக்கள். மூன்று தலைமுறை கோரிக்கை நிறைவேறியதால் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரின் சங்ககால பெயர் காவிரிப்பூம்பட்டினம். கர்நாடகாவின் குடகுமலையில் உருவாகும் காவிரி ஆறு இங்குள்ள கடலில் சங்கமிப்பதால் 'காவிரி புகும் பட்டினம்' என்பது மறுவி 'காவிரிப்பூம்பட்டினம்' என்றானது. 6ஆம் நூற்றாண்டில் சோழ பேரரசின் துறைமுக வணிக நகரமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம் அதன் பின்னர் பூம்புகார் என்று ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆவணங்களில் கீழையூர் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
பூம்புகார் என்று அழைக்கப்பட்டாலும் அரசு ஆவணங்களில் கீழையூர் என்றே பெயர் பதிவானது. இந்த கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்டே அனைத்து கிராமங்களும் உள்ள நிலையில் பலர் இப்பெயரை ஏற்க முடியாது எனவும் சங்ககால வரலாற்றுச் சிறப்புமிக்க காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரை வழங்கக் கோரி மூன்று தலைமுறையாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இக்கிராமத்திற்கு பணி மாறுதலில் வந்த கிராம நிர்வாக அலுவலரிடம் பூம்புகார் மற்றும் கீழையூர் ஊராட்சி மக்களின் சார்பாக தங்கள் ஊராட்சியின் பெயரை காவிரிப்பூம்பட்டினம் என பெயர்மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, வி.ஏ.ஓ மணிமாறன் முயற்சியில் மயிலாடுதுறை மாவட்ட எல்லை வரையரை தொடர்பான கருத்து கேட்பின் போது பூம்புகார் மக்களின் பெயர் மாற்ற கோரிக்கையை வரலாற்று ஆவணங்களுடன் முன்வைத்தார்.
சங்ககால இலக்கியமான பட்டினபாலை தொடங்கி கண்ணகி - கோவலன் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் சிலப்பதிகாரம் வரை இவ்வூர் காவிரிப்பூம்பட்டினம் என அழைக்கப்பட்டதையும், சோழப்பேரரசின் துறைமுக நகரம் என்பதையும் எடுத்துரைத்தார். தன் பேரில் அனைத்து தகவல்களும் அரசுக்கு சமர்பிக்கப்பட்டு கடந்த 28ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பின் போது 92 கீழையூர் கிராமத்தின் பெயரும் 6ஆம் நூற்றாண்டின் வழக்கத்தின் பேரில் காவிரிப்பூம்பட்டினம் என்று மாற்றப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதனால் பல நூற்றாண்டுக்கு முன்னர் பட்டனமாக இருந்து பின்னர் கிராமமாக மாறுவிய பூம்புகார் மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் ஆனது. அதனை கொண்டாடும் விதத்தில் ஆங்கிலப் புத்தாண்டான இன்று கிராமமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.