திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்ற போது ஒருவிதமான மாற்றம் உணரப்பட்டதாக விரைவு ரயில் ஓட்டுனர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருநின்றவூரிலிருந்து நெமிலிச்சேரி வரை தண்டவாளத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு இடத்தில் விரிசில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து காலை 7:30 மணிக்கு போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயில் திருநின்றவூரில் நிறுத்தி வைக்கப்பட்டு, ரயில்வே தொழில்நுட்பக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அங்கு வந்த ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர் விரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒருமணி நேரமாக மேற்கொள்ளப்பட்ட பணி காரணமாக அடுத்தடுத்து ஆறு விரைவு ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதில் ஒருமணி நேரத்திற்குப் பிறகு தண்டவாளம் சீர் செய்யப்பட்டு மீண்டும் வழக்கம்போல் விரைவு ரயில் இயக்கப்பட்டன. அச்சப்படும் அளவிற்கு சேதம் கிடையாது என்றும், அதிக வெப்பம் காரணமாக விரிசல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் ரயில்வே துறையினர் தெரிவித்தனர். இந்த விரிசலால், வெளியூரிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்தனர்.