தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் நீடிக்கிறது. இந்த கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ரயில் பாதைகள் பல தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன.
அப்படி ஸ்ரீவைகுண்டம் - செய்துங்கநல்லூர் ரயில் பாதையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் ஒரு ரயில் நிறுத்தப்பட்டது.
அந்த ரயிலில் 800 பயணிகள் இருந்தனர். இவர்களில் நேற்று 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள், 2 வேன்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தற்போது தண்ணீர் வடிந்ததால், ரயில் நிலையத்தில் இருந்த மீதமுள்ள 300 பயணிகள் தாங்களாகவே உடைமைகளுடன் வெளியேறி வருகின்றனர்.
இம்மாவட்டங்களில் மீட்பு பணியை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சர் எ,வ,வேலு, மூர்த்தி, கே.என்.நேரு, ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நிவாரண பொருட்களுடன் ஹெலிகாப்டர் இன்று காலை 7 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் ரயிலில் சிக்கி கொண்டிருப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின் கர்ப்பிணி, குழந்தை உட்பட உடனடி தேவை இருப்பவர்கள் மட்டும் 4 பேர் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டிருந்தனர்.