தனியார் பள்ளியின் வேன் மோதியதில் உயிரிழந்த 7 வயது சிறுவன் தீக்ஷித்தின் பிரேத பரிசோதனை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது.
முன்னதாக அம்மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய தீக்ஷித்தின் தாயார் ஜெனிபர் பள்ளி தாளாளரை கைதுசெய்ய வேண்டும், பள்ளியை சீல் வைக்கவேண்டும் , அப்போதுதான் சிறுவனின் உடலை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்திருந்தார். சிறுவனின் தாத்தாவும் முன்னாள் டிஎஸ்பியுமான சவுந்தர ராஜன், "குழந்தையின் இறப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு. இறந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறக்கூட நிர்வாகம் வரவில்லை" என குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் 4.30 மணிக்கு தொடங்கிய பிரேத பரிசோதனை 5.30க்கு நிறைவடைந்த பின் மத்திய சென்னை கோட்டாட்சியர் இளங்கோவன், மயிலாப்பூர் வட்டாட்சியர் நந்தினி, மாம்பலம் வட்டாசியர் சி.கே குமரன், ராயப்பேட்டை உதவி ஆணையாளர் லக்ஷ்மணன், மாம்பலம் உதவி ஆணையாளர் பாரதிராஜன் ஆகியோர் சுமார் 1 மணி நேரம் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எதையும் சட்டரீதியாகத்தான் அணுக முடியும், உடனடியாக கைதோ, சீல் வைப்பதோ சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ளும் படி அதிகாரிகள் கூறியதை ஏற்ற பெற்றோர் சிறுவனின் உடலை வாங்க சம்மதித்தனர்.
இதையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள இல்லாத்திற்கு தீக்ஷித் உடல் கொண்டு செல்லப்பட்டது. நாளை காலை 11 மணியளவில் வளசரவாக்கம் சிஎஸ்ஐ சர்ச் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் நடைபெற உள்ளது.