missing minors pt
தமிழ்நாடு

பேருந்து நிலையத்தில் காணாமல் போன இரண்டு மகன்கள்.. கண்ணீருடன் தேடி அலையும் தாய்!

குமரியில் பேருந்து நிலையத்தில் இருந்து காணாமல் போன தங்களது இரு மகன்களை கண்டுபிடித்துத்தருமாறு பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

யுவபுருஷ்

மதுரை கூடல் நகரை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி ராஜா. இவரது மனைவி ராஜம் டெய்லரிங் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு ரித்திக் ரோசன் (16), ஆதவன் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 11ம் வகுப்பும், இளைய மகன் 4ம் வகுப்பும் படித்து வந்தனர். கொரோனா காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டதால் இவர்களது பூர்வீக ஊரான குமரி மாவட்டம் குளச்சலுக்கு சென்று விட்டனர். ஆனால் ராஜம் மட்டும் அடிக்கடி மதுரை வந்து டெய்லரிங் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு, குளச்சலில் தனது 2 மகன்களுடன் பேருந்து நிலையம் சென்றார் ராஜம். மகன்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, அவர் பேருந்தில் ஏறி மதுரை புறப்பட்டார். ஆனால், மகன்கள் இருவரும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்த ராஜமும், அவரது கணவரும் பல இடங்களில் தேடியும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். 20 நாட்களாகியும் கண்டு பிடிக்க முடியாததால் ராஜம் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் கூறுகையில், “ராஜம் தன் இரு பிள்ளைகளுடன் பேருந்து நிலையத்திற்கு நடந்து வருவது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் பிறகு இரண்டு பிள்ளைகளும் கடற்கரை நோக்கி நடந்து செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேற்கண்ட அந்த கடற்பகுதி முழுவதும் பாறைகள் நிறைந்து இருக்கும் காரணத்தினால் கோடி முனை பகுதியில் உள்ள மீனவர்கள் உதவியோடு, கடலில் ஏதும் இரண்டு பிள்ளைகள் இழுத்துச் செல்லப்பட்டனரா என்று விசாரித்து வருகிறோம்” என்றனர்.