ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல் எனத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ''தமிழ்நாடு' என பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது பொருத்தமற்ற, மரபு மீறிய, உள்நோக்கம் கொண்ட, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல். இதற்கு எனது கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மொழிவாரியாக 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவில் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன. இப்போதைய தமிழ்நாடு, 'மெட்ராஸ்' என்ற பெயரில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து தனி மாநிலமாக இருந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 1956ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணம் தான் தற்போது தமிழ்நாடு. எனவேதான், தற்போதைய மெட்ராஸ், தற்போதைய தமிழ்நாடு, நவம்பர் 1ஆம் தேதி தோன்றியதன் அடிப்படையில் நவம்பர் ஒன்றாம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டு அந்த நாளை 'தமிழ்நாடு நாள்' என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அறிவித்தது.
இதனை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜூலை 15ஆம் நாளை தமிழ்நாடு நாள் என்று அறிவிக்கப் போவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார். மெட்ராஸ் மாகாணம் என்பதை மாற்றி 1967 ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட நாள் தான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தியதாக தெரிவித்து, அதன் அடிப்படையில் ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் இது பொருத்தமற்ற ஒன்றாகும். ஜூலை 18 ஆம் நாள் சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் அடிப்படையில் 1968ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 14-01-1969 முதல் தான் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வாதத்தின் படி பார்த்தாலும் 14-01-1969 ஆம் நாளை தான் 'தமிழ்நாடு நாள்' என்று கொண்டாட வேண்டும். ஒரு குழந்தை என்றைக்கு பிறக்கின்றதோ அந்த நாள் தான் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுமே தவிர, ஒரு பெண்ணினுடைய கருப்பையில் குழந்தை உருவாகும் நாளை குழந்தை பிறந்த நாளாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு அலுவலக கட்டிடம் முழுவதும் முடிக்கப்பட்டு என்று திறந்து வைக்கப்படுகிறதோ அந்த நாள்தான் அந்த அலுவலக கட்டடம் தோன்றிய நாளாக கருதப்படும். தவிர திட்ட அறிக்கை தயார் செய்து, நிர்வாக அனுமதி அளித்தது, நிதி ஒதுக்கீடு செய்தது, அடிக்கல் நாட்டியது ஆகியவற்றை எல்லாம் அந்த அலுவலக கட்டடமோ தோன்றிய நாளாக கருத முடியாது. எனவே ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அவர்களின் வாதத்தின் படியே நியாயமற்றதாக இருக்கிறது.
ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைக்கப்படுகிறது. பத்து வருடங்கள் கழித்து அந்த குழந்தையின் பெயர் மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும் அந்த குழந்தையின் பிறந்தநாள் என்பது அந்த குழந்தை என்று பிறந்ததோ அந்த நாளில்தான் கொண்டாடப்படுமே தவிர பெயர் மாற்றம் செய்த நாளில் கொண்டாடப்பட மாட்டாது. இதேபோன்று தற்போதைய நிலப்பரப்புடன் 1956 ஆம் ஆண்டு பிறந்த சென்னை மாகாணம் என்ற குழந்தைக்கு 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய முடிவெடுத்து அதன் அடிப்படையில் 1969ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டாலும் அதன் பிறந்தநாள் 1956ம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தான். எனவே ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு எந்த விதத்திலும் பொருத்தமாக இருக்காது. இந்த செயல் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் முன் பிறந்த மாநிலத்தை பின் பிறந்ததாக கூறுவதற்கு சமம். இது வரலாற்றை திரித்து எழுதும் முயற்சி. 1956ஆம் ஆண்டு பிறந்த மாநிலத்தை 1962ஆம் ஆண்டு பிறந்ததாக சித்தரிப்பது மரபு மீறிய செயல், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம்.
எனவே சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள் எல்லாம் நவம்பர் ஒன்றாம் தேதியையே அந்த மாநிலங்கள் உருவான நாளாகக் கொண்டாடுவதைக் கருத்தில் கொண்டு ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்று, நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று தொடர்ந்து இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.