சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் ஒருவரின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவிற்கு இடையே பல்வேறு இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் ஏடிஎம் மையங்கள், சில மருத்துவமனைகள் உள்ளிட்டவை சீலிட்டு அடைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் அங்கு வருகை தந்ததே அதற்கு காரணமாக உள்ளது. இதற்கிடையே சென்னை ஃபீனிக்ஸ் மாலில் உள்ள லைஃப் ஸ்டைல் கடையில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் அந்த கடைக்கு வந்து சென்றவர்களை பீதியடையச் செய்தது.
இந்த வரிசையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சேர்ந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் ஒருவரின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் உயர்நீதிமன்ற வளாகத்தில் கொரோனா அச்சம் பரவியுள்ளது. இதுதொடர்பாக 7 நீதிபதிகளுடன் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்திய தலைமை நீதிபதி, நீதிமன்றத்தின் 2வது வளாகத்தை முழுவதுமாக கிருமிநாசினியால் சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
அத்துடன் நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் ஆகிய இருவரின் அறைகளையும் கிருமிநாசிகள் கொண்டு தூய்மைப் படுத்த அறிவுறுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் 2வது வளாகத்தில் இந்த வார அமர்வில் வழக்குகளை விசாரித்தவர்கள் என்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.