பரதநாட்டியக் கலைஞரான திருநங்கை நர்த்தகி நடராஜ், பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். வேதனைகளை சாதனைகளாக மாற்றிய அவரின் வாழ்க்கை பயணத்தை தெரிந்து கொள்வோம்.
மதுரையில் நடராஜராக பிறந்த நர்த்தகி நடராஜ், 10-ஆவது வயதில் தன்னுள் மாற்றங்களை உணர்ந்துள்ளார். சிறு வயதிலேய நாட்டியத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார். திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு நடனம் ஆடி மகிழ்வார்.
உடலளவிலும், மனதளவிலும் மாற்றத்தை உணர்ந்த நடராஜ், சிறுவயதில் பல ஏளனங்களை சந்தித்துள்ளார். பரதத்தை கற்க, மதுரையில் இருந்து கடந்த 1984-ஆம் ஆண்டு தஞ்சைக்கு சென்றுள்ளார். பரதநாட்டியத்தை கற்ற அவர், ஆங்காங்கே கச்சேரிகளையும் செய்து வந்தார். இன்று உலகம் முழுவதும் பயணித்து பல ஆயிரம் மேடைகளைக் கடந்திருக்கிறார்.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த நர்த்தகி நடராஜ், பின் வெள்ளியம்பளம் நடனப் பள்ளியைத் தொடங்கினார். தற்போது வரை நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ளார்.
சங்க இலக்கியங்களையும், நவீன கதைகளையும் தம் நடனத்தில் பயன்படுத்தி பெருமை சேர்த்த நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ்-க்கு, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
திருநங்கைகளில் முதன் முதலில் பாஸ்போர்ட் பெற்றவர், முதலில் தேசிய விருது வென்றவர், முதன் முதலில் கலைமாமணி விருது பெற்றவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் நர்த்தகி நடராஜ்.