திருவாரூரில் நெல் பாரம்பரியங்களை மீட்டெடுக்கும் வகையில் நெல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
விளைந்த நெல்மணிகளை உணவுக்கும், கூலிக்கும், விற்பனைக்கும் போக வீடுகளில் சேமித்து, அடுத்த பருவம் தொடங்கியதும் அதே
நெல்லை வயலில் விதைக்கும் வழக்கம் மட்டுமே நம் விவசாயிகளிடம் இருந்தது. வறட்சி, குளிர், மழை என அனைத்து பருவ
நிலைகளையும் தாங்கி வளரும் நெல் ரகங்களும் இருந்தன. இவையனைத்தும் மாறி பொன்னி உள்ளிட்ட வெகுசில ரகங்களை மட்டுமே
விளைவிக்க, அந்த விதை நெல்லையும் விலைக்கு வாங்க விவசாயிகள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையை மாற்றும் முனைப்புடன் 2006ஆம் ஆண்டு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் முயற்சியால் தொடங்கப்பட்டது
பாரம்பரிய நெல் திருவிழா. 2 நாள் விழாவின் முதல் நாளில், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து, கோட்டை வரை
மாட்டுவண்டியில் நெல் ஏற்றி விவசாயிகள் பேரணியாக வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற இயற்கை வேளாண்மை குறித்த
கருத்தரங்கில் தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்க மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள்
பங்கேற்றனர்.
மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, இலுப்பம்பூ சம்பா என 169 வகையாக பாரம்பரிய நெல் விதைகள் இங்கு காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன. மருந்தாகும் பாரம்பரிய நெல் ரகங்கள், நஞ்சில்லா உணவு, நோயற்ற வாழ்வு, தற்சார்பு என பல்வேறு அம்சங்களை
கொண்டுள்ள இதுபோன்ற விழாக்களை அரசு முன்னின்று நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.