தமிழ்நாடு

'பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்' - வைகோ, திருச்சி சிவா வலியுறுத்தல்

'பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்' - வைகோ, திருச்சி சிவா வலியுறுத்தல்

kaleelrahman

திருச்சி பெல் நிறுவனத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் 400 சிலிண்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாவும், 2016ஆம் ஆண்டு வரை திருச்சி பெல் மருத்துவமனையில் அந்த ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார். பெல் நிறுவனத்தின் மேலாண்மை கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் இயக்கப்படாமல் உள்ளதாகவும், ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், திமுக எம்.பி. திருச்சி சிவாவும் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெல் நிறுவனத்தில் உள்ள 3 ஆக்சிஜன் உற்பத்தி கலன்களில் மணிக்கு 140 மெட்ரிக் க்யூப் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். இந்த ஆலையில் கலன்களை முறையாக பராமரித்து 20 நாட்களுக்குள் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கினால், கொரோனா நோயாளிகளுக்கு உதவ முடியும் என திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.