ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டி ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் எருது விடும் விழா நேற்று (14.02.2023) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் ஓடுபாதையில் சீறிப்பாய்ந்து ஓடியது.
இந்நிலையில், போட்டியில் பங்கேற்பதற்காக காளை மாடு ஒன்றை அதன் உரிமையாளர் அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஓடுபாதை அருகே நின்று கொண்டிருந்த புலிமேடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ்குமார் (28 ) என்பவரை காளைமாடு முட்டி தூக்கி வீசியது. அதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.