ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பெயர் ஆலய கல்வெட்டில் எம்.பி என போடப்பட்டதற்கு, அவர் கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள அன்னபூரணி கோயிலில் நேற்று முந்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் நிதியுதவி அளித்திருந்தனர். இதனால், ஆலயத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் குமார், ஓ.பி.ஜெயப்பிரதீப்குமார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில், முக்கியமான விஷயம் என்னவெனில், ரவீந்திரநாத் பெயருக்கு முன்பாக தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என எழுதப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த கல்வெட்டு படம் சமூக வலைதளங்களில் நேற்று முதல் வேகமாக பகிரப்பட்டு வந்தது. பின்னர் ஆலைய கல்வெட்டில் இருந்து எம்.பி என எழுதப்பட்ட ரவீந்திரநாத் பெயர் மறைக்கப்பட்டது.
இந்நிலையில் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் “ குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் நேற்று எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்வு மிகவும் கண்டிக்கதக்கது.தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது.மேலும் எனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.