ops pt web
தமிழ்நாடு

‘ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது’ என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு ஓபிஎஸ் அளித்த ஒற்றை வரி பதில்!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்-ன் வெற்றி செல்லாது என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Angeshwar G

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தது. ஆனால் தேர்தலை தள்ளிவைக்கவில்லை” என்று கூறியிருந்தார்

இந்த தேர்தல் வழக்கை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் குமாரின் நிராகரிப்பு மனு தொடர்ந்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடந்துவந்தது. அதில் மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் குமார், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

AIADMK

அதில் “வேட்புமனுவில் சொத்துகளின் விவரம், வங்கி கடன், வைப்பு தொகை மூலமாக பெற்ற வட்டி விவரங்களை ரவீந்திரநாத் தெரிவிக்கவில்லை. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது செல்லாது. அதனால் தேர்தல் நடத்தப்பட்டது செல்லாது” என தீர்ப்பளித்துள்ளார். அதன்மூலம் ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியும் செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை பிறப்பித்தவுடன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முப்பது நாட்களுக்கு தனது தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.

இது குறித்து நேற்றிரவு தேனி பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள தன் இல்லத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் ஓ.பி.ரவீந்திரநாத்தின் தந்தையுமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது “நீதி அரசரே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என கூறியிருக்கிறார்” எனக் கூறினார்.

பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்டபோது அது குறித்து எனது விரிவான அறிக்கை நாளை (இன்று) வெளியாகும் என ஓ.பன்னீல்செல்வம் தெரிவித்தார்.