அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பினை இன்று நடத்தக்கூடாது என்று ஓபிஎஸ் அணியினர், திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் உறுப்பினர்கள் பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதலில் பேசிய திமுக செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கும் நிலையில் அவசரப்படவேண்டிய காரணம் என்ன?. நம்பிக்கை வாக்கெடுப்பினை ரகசிய வாக்கெடுப்பு முறையில் வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிக்குச் சென்று வந்த பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மக்கள் குரலை எம்எல்ஏக்கள் சபையில் ஒலிக்க வேண்டும் எனவும் பன்னீர் செல்வம் வலியுறுத்தினார். இதையடுத்து பேசிய மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ நட்ராஜ், மக்களின் கருத்தை எம்எல்ஏக்கள் அறிந்தபிறகு வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கூறினார்.