தமிழ்நாடு

"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி

"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி

jagadeesh

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக இருக்கின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

விராத் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் சுப்ரமணியன் சுவாமியின் 80வது பிறந்தநாள் விழா மற்றும் பாராட்டு விழா மதுரை வர்த்தக மைய கட்டிடத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சுப்ரமணியன் சுவாமி "தமிழகத்திற்கு புதிய தலைமை உருவாகும் அதற்கு எனது உதவி இருக்கும். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட கோரினேன். ஆனால் ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்ததால் அதற்கு சம்மதிக்கவில்லை, தற்போதைய முதல்வர் ஈபிஎஸ்சுக்கும் கடிதம் அனுப்பியும் பதில் இல்லை. கட்டாயம் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும்" என்றார் சுவாமி. 

மேலும் பேசிய சுப்ரமணியன் சுவாமி "தமிழை நன்கு கற்க வேண்டும் உலக அறிவுக்காக ஆங்கிலம் கற்க வேண்டும், வேலை வாய்ப்பிற்காக இஷ்டம் இருந்தால் ஹிந்தி கற்கலாம் ஆனால் அதற்கும் இங்கு வழி இல்லை. ராமர் இங்கு பிறந்தார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதில் கேள்வி எழுப்ப இயலாது, ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மறுக்க முடியாது, மசூதிகள் கட்ட நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அனைத்து விவகாரங்களிலும் அனைவரும் அனுசரித்து போக வேண்டும், சட்டப்படி ராமர் கோவில் கட்டவுள்ளோம், காசி விஸ்வநாதபுரத்திலும் கோவிலை இடித்து பள்ளிவாசல் எழுப்பபட்டுள்ளது" என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய சுப்ரமணியன் சுவாமி, "தமிழகத்தின் மக்கள் சாதி பண பலத்தை மறந்தால் தான் மறுமலர்ச்சி உருவாகும், வடமாநிலத்தில் குரல் எழுப்பகூடிய நேர்மையாளர்களை தமிழக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், இந்தியாவில் சாதி பெயரே இருக்க கூடாது. நாட்டின் குடிமகன் என்பதை மட்டுமே எண்ணம் கொள்ள வேண்டும், இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற மறுமலர்ச்சியை உருவாக்க போராடுகிறேன். மதுரையில் எந்த வளர்ச்சியும் இல்லை, நெல்லை முதல் மதுரை வரை மெட்ரோ சேவை வேண்டும் என கேட்டுள்ளேன் ஆனால் நடைபெறவில்லை. மதுரையில் பொருளாதார மறுமலர்ச்சி கொண்டுவர வேண்டும் , அரசின் சார்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில் ஊழலை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றேன்" என்றார்.