தமிழ்நாடு

’மேகதாது அணை பற்றி பேசாதீர்கள்’ - காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்பு

’மேகதாது அணை பற்றி பேசாதீர்கள்’ - காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்பு

Sinekadhara

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களின் அனுமதியின்றி மேகதாது அணை விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 30.6 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூடியது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார், தமிழ்நாடு சார்பில், பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கர்நாடகா சார்பில் ராகேஷ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரி, கேரளா மாநில பிரதிநிதிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழகத்துக்கு கர்நாடகம் தர வேண்டிய 30.6 டிஎம்சி தண்ணீரை வழங்க தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், 2 நாட்களுக்கு முன்கூட காவிரியில் இருந்து 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதாக கர்நாடகம் பதில் கூறியது. இதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்த காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன், உபரி நீரை திறந்துவிடுவதை குறிப்பிடாமல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கர்நாடக அரசு உரிய நீரை தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு சார்பில் ஒருபுறம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசோ இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களின் அனுமதியின்றி இந்த விவகாரத்தை பேசக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால், கூட்டத்தில் மேகதாது விவகாரம் விவாதிக்கப்படவில்லை.

மேகதாது விவகாரம் குறித்தும் கூட்டத்தில் பேச பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், தொடர்புடைய மாநிலங்களின் கருத்துகளால் விவாதிக்கப்படவில்லை. தமிழகம் தரப்பில் காவிரி குண்டாறு விவகாரம் முன்வைக்கப்பட்டது. கர்நாடகம் எதிர்த்ததால் இந்த விவகாரம் பேசப்படவில்லை.

செப்டம்பர் மாதத்தில் ஏற்கனவே தரவேண்டிய நீர் மற்றும் இந்த மாதம் வழங்க வேண்டிய நீரை தர கூட்டத்தில் கர்நாடகம் உறுதி அளித்துள்ளது. இதன்படி 30.6 டிஎம்சி தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை அமைப்பின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.