தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அறுவை சிகிச்சை மையத்துக்கு காலை 4:30 மணிக்கு மாற்றப்பட்டார். மயக்கவியல் நிபுணர்களால் மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் காலை 5 மணிக்கு மேல் அறுவை சிகிச்சை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை செய்து வருவதாக காவேரி மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிகின்றன. நான்கு முதல் ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெறும் என கூறப்படுகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் படி கடந்த 15 ஆம் தேதி இரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
அமைச்சரின் உடல்நலத்தை எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்று வருகிறது