உதகையில் வசிப்பவர்கள் மட்டுமல்ல இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் குடிநீர் உள்ளிட்ட தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய பார்சன்ஸ்வேலி, மார்லி மந்து, டைகர் ஹில், கோரிசோலா, மேல் தொட்டபெட்டா, கீழ் தொட்டபெட்டா ஆகிய அணைகள் உள்ளன. இவைகளில் 90 சதவிகிதம் அளவிற்கு தற்போது நீர் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பட்பயர், பாரதி நகர், இந்து நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மலைப்பிரதேசமான உதகையில் மேடான பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு நீண்ட தூரத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுவதால், குழாய்களில் மிகமெல்லியதாக நீர் வருவதாக கூறுகின்றனர். பல நேரங்களில் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதேயில்லை எனக் கூறும் அம்மக்கள், இதனால் உரிய நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், பணிக்குச் செல்வதற்கும் சிரமமாக இருப்பதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து உதகை நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “புதிய ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நீர் உந்து நிலையத்தில் இருந்துதான் தொலைவில் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் செல்வது சிக்கலாக இருப்பதால், பட்பயர் பகுதியில் புதிய நீர் உந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
தமிழகத்தில், குறிப்பாக மேட்டூர் அணையில் குறைந்தளவே நீர் உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுஒருபுறமிருக்க, அணைகளில் நீர் இருந்தும் பயன்படுத்த முடியாமல் உதகை பொதுமக்கள் சிரமப்படுவதை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.