தமிழ்நாடு

துர்நாற்றம் வீசும் உதகை படகு இல்லம் ஏரி

துர்நாற்றம் வீசும் உதகை படகு இல்லம் ஏரி

webteam

சுற்றுச்சூழலை சீர்கெடுக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், உதகை படகு இல்ல ஏரியையும் விட்டு வைக்கவில்லை. மேலும் கழிவுகளால் துர்நாற்றம் வீசும் படகு இல்ல ஏரியை தூய்மைப்படுத்த உதகை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதகை நகரின் பெரும்பாலான வீடுகளின் கழிவுகள், நகரின் மத்தியில் ஓடும் கோடப் மந்து கால்வாயில் விடப்படுகின்றன. நகரில் பாதாள சாக்கடைத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கழிவு‌கள், பிளாஸ்டிக் குப்பைகளால் கோடப் மந்து கால்வாய், கழிவு நீர் ஓடையாக காட்சியளிக்கிறது. அண்மையில் பெய்த மழையால், கோடப் மந்து கால்வாயில் பெருக்கெடுத்த வெள்ளம் உதகை படகு இல்ல ஏரியில் கலந்துள்ளது. இதனால் உதகையின் முக்கிய சுற்றுலா தலமான படகு இல்ல ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்க ஏரியில் கழிவுகள் கலக்கும் இடத்தில் கயிறு கட்டப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் பலத்த மழை பெய்தால் வெறும் கயிற்றை வைத்து குப்பைகளை தடுத்துவிட முடியாது என்று கூறும் உதகை மக்கள், உடனடியாக ஏரியின் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

கோடப் மந்து க‌ல்வாயிலும், பாதாள சாக்கடைக்கு செல்லும் கால்வாயிலும் மக்கள் குப்பைகளை வீசியெறியக்கூடாது. தங்கள் வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொட்ட வேண்டும். கால்வாயில் குப்பைகளை கொட்டி அடைப்புகளை ஏற்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு அறிவுறுத்தியதாக உதகை நகராட்சி ஆணையர் ரவி கூறினார்.