ஆன்லைன் கேம் விளையாட விடாததால் வீட்டில் இருந்து ரூ. 33 லட்சம் பணம் மற்றும் 213 சவரன் நகையை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற 15 வயது சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மொட்டை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட் குமார். சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இவரது 15 வயது மகன், வீட்டில் எந்நேரமும் ஆன்லைன் கேம் விளையாடி வந்ததாகவும் அதனால் வீட்டில் உள்ள அனைவரும் சிறுவனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் கடந்த 17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வீட்டை சோதனை செய்தபோது பீரோவில் இருந்த 33 லட்சம் பணம், 213 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சிறுவனை தேடிவந்த நிலையில், தாம்பரம் பகுதியில் சிறுவன் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் 24 மணி நேரத்திற்குள் சிறுவனை மீட்டு பணம் மற்றும் நகையை கைப்பற்றி பெற்றோரிடம் கொடுத்து சிறுவனை கண்டித்து வீட்டிற்கு அனுப்பினார்.