கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் யானை தாக்கியதில் வனக்காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாவரக்கரை கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் 7 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வன ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கிராமத்தையொட்டி வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 7 யானைகளில் ஒரு யானை ஆக்ரோஷமாக திரும்பி வன ஊழியர்களை விரட்டியது. இதில் கோட்டத்தி கிராமத்தை சேர்ந்த வனக்காவலர் மாரப்பா என்பவர் ஓடும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரை அந்த யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மற்ற வன ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரப்பா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். யானை தாக்கி வனக்காவலர் இறந்தது குறித்து வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.