நேற்று சென்னை ஆலந்தூரில் அரசு பேருந்து மோதியதில் பிரமாண்ட வழிகாட்டி பெயர் பலகை விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டிய சாலையோரத்தில், வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் பெரியளவிலான வழிகாட்டி பெயர் பலகை நிறுவப்பட்டிருந்தது. பரபரப்பான இச்சாலையில் கோயம்பேடு நேக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வழிகாட்டி பெயர் பலகை மீது பயங்கரமாக மோதியது. இதில் பெயர் பலகை நிறுவப்பட்டிருந்த சிமெண்ட் தளம் உடைந்து அந்த பலகை அடியோடு சாலையில் சாய்ந்து விழுந்தது.
அந்நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சண்முகசுந்தரம் என்ற இளைஞர் மீது பலகை விழுந்ததில், அவர் படுகாயமடைந்தார். மேலும் மினி சரக்கு வாகனத்தில் சென்ற இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பெயர் பலகையை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர். இதனிடையே விபத்துக்கு பின் தலைமறைவான ஓட்டுநர் ரகுநாத் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.