தமிழ்நாடு

விஷவாயு தாக்கியவரை வாயோடு வாய் வைத்து காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர்

விஷவாயு தாக்கியவரை வாயோடு வாய் வைத்து காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர்

rajakannan

திருவேற்காடு அருகே கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கியவரை மீட்ட தீயணைப்பு துறையினர் அவரை உயிர் பிழைக்க வைக்க போராடும் காட்சி பார்ப்போரை நெகிழ வைக்கிறது.

திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிக்காக மதுரவாயல், சீமாத்தம்மன் நகர், பெரியார் தெருவைச் சேர்ந்த பாலா(37), பிரதீப், கார்த்தி, ஜெகன் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 15 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டது.

இதையடுத்து கழிவுநீர் தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள சகதிகளை அகற்றுவதற்காக 4 பேரும் அந்த தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். முதலில் பாலா இறங்கி அடியில் உள்ள சகதிகளை கிளறும் போது விஷவாயு தாக்கி உள்ளது. அப்போது அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி உள்ளே விழுந்துள்ளார்.

இதனை கண்டதும் மற்ற மூன்று பேரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கும் முயற்சியை கைவிட்டனர். இதுகுறித்து பூவிருந்தவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு அலுவலர் இளங்கோ தலைமையில் விரைந்து வந்த வீரர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் கழிவு நீர் தொட்டியில் மயங்கி கிடந்த பாலாவை உடனடியாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

மயங்கி கிடந்த பாலாவை உயிர் பிழைக்க வைக்க கழிவு நீர் என்றும் பாராமல் வாயோடு வாய் வைத்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக சுவாவசமளித்து வந்தனர். ஆனால் பாலா துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

விஷ வாயு தாக்கியவரை உயிர் பிழைக்க வைக்க தீயணைப்பு துறையினர் போராடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைராலாவதோடு பாரட்டுகளையும் பெற்றுள்ளது.