தமிழ்நாடு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

Sinekadhara

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. பட்டாசு ஆலைகள் முறையான அனுமதியுடன் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு செயல்படுகிறதா என கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும் விபத்துகளும் தொடர்ந்துகொண்டே வருகிறது.

சிவகாசி அருகே உள்ள சரஸ்வதி பாளையம் பகுதியில் அய்யன் என்ற தனியார் பட்டாசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆலையின் ஒரு பகுதியில் ரோல் கேப் தயாரிக்கும்போது உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசியை சேர்ந்த சின்ன முனியாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 10ஆம் தேதி சட்டவிரோதமாக தாயில்பட்டி பகுதியில் பட்டாசு உற்பத்தி செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை 14 பட்டாசு விபத்துகளில் 45 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.