தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (75). முதியவரான இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மும்பை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் வாழ்ந்து வந்த இவர், சில இடங்களில் இஸ்திரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். மேலும் யாசகம் பெற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை பல்வேறு நல திட்டங்களுக்கு கொடுத்து வந்துள்ளார்.
அவர் யாசகம் செய்த பணத்தை நன்கொடையாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர், “அந்த பணத்தை எங்களிடம் வழங்க வேண்டும்” என்றுள்ளனர். இதனால் குடும்பத்தை விட்டு வெளியேறிய பூல்பாண்டியன், தொடர்ந்து பல்வேறு நகரங்களில் யாசகமாகவும் பல தொழிலதிபர்களிடம் நன்கொடையாகவும் பணத்தை பெற்றுள்ளார். இந்த பணத்தை பள்ளிகளுக்கும் ஏழை சிறுவர் சிறுமியர்களுக்கும் உதவியாக வழங்கியதோடு, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக மட்டும் இதுவரை ரூ.55 லட்சம் வழங்கி உள்ளதாக சொல்கிறார்.
இந்நிலையில், பெரம்பலூர் சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியரை மட்டும் சந்திக்காமல் இருந்ததாக கூறிவந்த இவர், இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை நேரில் சந்தித்து, தன்னிடம் இருந்த பத்தாயிரம் ரூபாயை முதல்வரின் நிவாரண நிதியில் நேரடியாக வங்கியில் செலுத்த உள்ளதாகவும் அதற்கு முன் ஆட்சியரிடம் வாழ்த்து பெற வந்ததாகவும் தெரிவித்தார். இதனைக் கேட்ட ஆட்சியர் கற்பகம், அவரது செயலை பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதனை தொடர்ந்து தன்னிடம் இருந்த ரூ.10,000 ரொக்க பணத்தை முதல்வரின் நிவாரண நிதியில் செலுத்த சென்றார் அவர்.
முதியவரின் இச்செயல், அங்கிருந்த பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. பலரும் அவரை பாராட்டி தீர்த்தனர்.