தமிழ்நாடு

மர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்

மர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்

webteam

கடலூரில் மூதாட்டி மர்மமாக இறந்த வழக்கில் கொலை செய்தது பள்ளிச் சிறுவன் என போலீஸார் கண்டுபிடித்து சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள மேல்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி என்பவரின் மனைவி பொன்னம்மாள் (65). இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 30ஆம் தேதி நள்ளிரவு மர்மமான முறையில் தலையில் பலத்த காயங்களுடன் பொன்னம்மாள் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் ராமநத்தம் காவல்துறை ஆய்வாளர் மற்றும் போலீசார் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததால், ஏதேனும் முன்விரோதத்தால் தாக்கப்பட்டாரா அல்லது அவரது வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் செல்ல தாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. அவர்கள் உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் விசாரித்தனர். இதற்கிடையில் கடந்த 4-ஆம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் இறந்தார். உடனடியாக ராமநத்தம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். 

பொன்னம்மாளின் வீட்டின் அருகே கீழக்கல்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவ-மாணவிகள் பொன்னம்மாள் வீட்டில் உள்ள தோட்டத்தில் விளைந்துள்ள ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி, எலுமிச்சம் பழம் ஆகியவற்றை வாங்கிச் செல்வது வழக்கம். பழம் வாங்குவதில் ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் பள்ளி மாணவ - மாணவிகளையும் விசாரணை செய்தனர். அப்போது கீழகல்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து அவரிடம் இருந்து பழங்களை வாங்கி சாப்பிட்டுள்ளார். 

சிறுவன் கொடுத்த பணம் செல்லாது என தெரிந்த மூதாட்டி, பள்ளி வளாகத்திற்குள் சென்று அந்த சிறுவனிடம் தகராறு செய்துள்ளார். அதன்பிறகு அதற்கான ரூபாயை பெற்றுக் கொண்ட, மூதாட்டி வழக்கம்போல் தனது பணிகளை செய்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட சிறுவன் தனது செலவிற்காக வீட்டில் பணம் கேட்டுள்ளார். அவரது தாய் கொடுக்க மறுத்ததை அடுத்து, பணத்திற்காக அலைந்துள்ளார். அப்போது மூதாட்டி அதிக அளவு பணம் வைத்து பார்த்த சிறுவன், அன்று இரவு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பணத்தை திருட முயற்சி செய்து உள்ளார். 

அதை அறிந்த மூதாட்டி சிறுவனை பிடித்துள்ளார். இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து மூதாட்டியை சிறுவன் அடித்ததாகவும், நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மயங்கியதாகவும் தெரிகிறது. பின்னர் சிறுவன் அங்கிருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார். செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், செல்போன் பயன்படுத்திய சிறுவனின் தாய் மாட்டிக்கொண்டார். 

போலீஸார் உண்மையை கண்டுபிடித்துவிட்டனர் என அறிந்த சிறுவன், உடனடியாக அருகில் இருந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். கிராம நிர்வாக அலுவலர் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்து, சிறுவனை பிடித்து கொடுத்தார். அவரிடம் விசாரணை செய்ததில், கொலை நடந்தற்கான காரணத்தை விளக்கியுள்ளார். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீஸார், கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.