கோயம்பேடு சந்தையில் இருந்து வந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 4 பேர் என புதிதாக 24 பேருக்கு அரியலூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையிலிருந்து, அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காவனூர், உள்ளியக்குடி,கொலையனூர், பெரியாக்குறிச்சி, சிறு களத்தூர், கடுகூர் ஆகிய பகுதிகளுக்கு வந்த 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் இறக்கியபின் மீண்டும் அரியலூருக்கு திரும்பிய ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 2 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த இரண்டு பணியாளர்கள் என மொத்தம் நான்கு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்களின் தொற்று எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இது மட்டுல்லாமல் காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 53 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் அரியலூர்,ஜெயங்கொண்டம், ஆண்டிமடம்,செந்துறை உள்ளிட்ட 5 முகாம்களில் 440 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.