தமிழ்நாடு

14,098 மனுக்கள், 28 குற்றச்சாட்டுகள் - விளக்கம் கேட்டு சிதம்பரம் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ்

14,098 மனுக்கள், 28 குற்றச்சாட்டுகள் - விளக்கம் கேட்டு சிதம்பரம் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ்

webteam

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து இந்து சமய அறநிலைத்துறை குழுவிடம் கொடுக்கப்பட்ட 19,405 மனுக்களில், 14,098 மனுக்கள் கோயில் நிர்வாகத்தின் மீது குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறைபாடுகள் குறித்து 15 தினங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்கு வழக்குகள் குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைத்துறை விசாரணைக் குழு சென்றது. ஆனால் அதற்கு முழு ஒத்துழைப்பை, கோயில் நிர்வாகம் தரவில்லை என இந்து சமய அறநிலைத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜூன் 20 மற்றும் 21-ம் தேதிகளில், சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில், குறித்து இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் நேரில் வந்தோ, மின்னஞ்சல் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 19,405 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அதில் 14,098 மனுக்கள் கோயில் நிர்வாகத்தின் மீது குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,

1. பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் பிரசாதம் வீடு தேடி வரும் என வசூல் செய்கிறார்கள். அதற்கு ரசீது வழங்குவதில்லை.

2. சிதம்பரம் நடராஜர் கோயில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்.

3. தினமும் சிற்றம்பல மேடையில், ஒவ்வொரு கால பூஜையின் போதும், தேவாரம், திருமுறைகளைப் பாட ஓதுவார்கள் பணியமர்த்த வேண்டும்.

4. அனைத்து விதமான பூஜை, அர்ச்சனைகளுக்கும் உரிய ரசீது தரப்பட வேண்டும்.

5. கோயிலுக்கு வரும் பக்தர்களை தரக்குறைவாக பேசி அவமதிப்பு செய்கிறார்கள்.

6. நாட்டிய அஞ்சலி விழாவில், ரூ. 20,000 முதல் கட்டணம் கேட்பதால் ஏழை குழந்தைகள் கலந்து கொள்ள முடியவில்லை.

7. பெண்களை மரியாதை குறைவாக நடத்துகிறார்கள்.

8. ஆயிரம் கால் மண்டபத்தினை நட்சத்திர விடுதி போல் பயன்படுத்துகிறார்கள்.

9. சுவாமி சிலைகளை கணக்கிட வேண்டும். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அந்த சிலைகள் சரியாக உள்ளதா என அரசு சோதனை செய்ய வேண்டும்.

10. சிதம்பரம் கோயில் கல்வெட்டுகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.

11. வருடம் முழுவதும் வீட்டு விலாசத்திற்கு பிரசாதம் அனுப்ப ரூபாய் 2500 வசூல் செய்கிறார்கள். ஆனால் ரசீது வழங்குவதில்லை.

12. நடராஜர் சன்னதிக்கு அருகில் இருந்த நந்தனார் சிலையை தீட்சிதர்கள் அப்புறப்படுத்தி விட்டார்கள்.

13. ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் நடைபெற்றதில், தொழிலதிபர்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் காலணியுடன் சென்றுள்ளனர்.

14. தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் மற்றும் எந்தவிதமான விழாவும் நடத்த விடாமல் தீட்சிதர்கள் தடுக்கின்றனர்.

15. குழந்தை திருமணம் நடைபெறுகிறது.

16. ஆண்டாள் சிலையை எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர்.

17. பக்தர்கள் வழங்கும் தங்கம், வெள்ளி மற்றும் பணத்திற்கு, ரசீது தராமல் தீட்சிதர்கள் எடுத்துச் சென்றனர்.

18. திருக்கோயில் புனரமைப்பு என்ற பெயரில் கல்வெட்டுகளை அழிக்கின்றனர்.

இவ்வாறு 28 வகையான குற்றச்சாட்டுகளுக்கு, 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு, இந்து சமய அறநிலைத்துறை விசாரணைக் குழு, பொது தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.