சத்தியமங்கலம் அருகே விளைந்த பூக்களை வாங்க ஆளில்லாததால் குளத்தில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் பகுதியில் பெரியகுளம்,சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பங்கிப்பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் 10 டன் பூக்கள் மகசூல் கிடைப்பதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது சித்திரை மாதம் என்பதால் திருமண சுபநிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால் பூக்கள் விலை சரிந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் வட்டாரத்தில் கொள்முதல் செய்து மைசூர், கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் பூக்களை வாங்க ஆளில்லாததால் சுமார் 5 டன் பூக்கள் தேங்கின. சம்பங்கிப்பூக்களை பறிக்காமல் விட்டால் பூக்கள் அழுகி செடி வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் பூக்களை பறிக்க கூலியாக கிலோ ரூ 7 வரை செலவு செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி சத்தியமங்கலத்தில் 10 டன் பூக்கள் வரத்து வந்ததால் 3 டன் பூக்கள் நறுமண தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. மீதமுள்ள 7 டன் பூக்களை பெரியகுளம் குளத்தில் கொட்டினர்.
சித்திரை மாதம் முடியும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.