தமிழ்நாடு

“ நாய்க்கறி அல்ல.. ஆட்டு இறைச்சிதான்..”ஆய்வின் முடிவால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி..!

“ நாய்க்கறி அல்ல.. ஆட்டு இறைச்சிதான்..”ஆய்வின் முடிவால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி..!

webteam

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டுக் கறிதான் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ஜோத்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயில், கடந்த 17-ஆம் தேதி சென்னை எழும்பூர் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் அழுகிய இறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்ற உணவு பாதுகாப்புத் துறையினர், பார்சல்கள் வைக்கப்படும் இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் 5-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் 2000 கிலோ இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இறைச்சியின் வால் நீளமாக இருந்ததால் அது நாய்க்கறியாக இருக்குமோ என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்தது. அப்படியானால், சென்னை ஹோட்டல்களில் ரகசியமாக வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே, நாய்க்கறி விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு எழுந்தது.

இதனிடையே கறி விற்பனையாளர்கள், தாங்கள் ஆட்டுக்கறியை வாங்கவே ஆர்டர் கொடுத்ததாகவும், ஆர்டர் அளித்ததற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் கைப்பற்றிய இறைச்சி நாய்க்கறியா..? அல்லது ஆட்டு இறைச்சியா என்பதை கண்டறிய, அவற்றில் சில துண்டுகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

அதில் எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டு இறைச்சியே என்பது தெரியவந்துள்ளது.  சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இதனால் நாய்க்கறியாக இருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த அசைவ பிரியர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இனி ஹோட்டல்களில் நிம்மதியாக சாப்பிடலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.