தமிழ்நாடு

லாட்டரி பற்றிய சிந்தனையே இல்லை: நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

லாட்டரி பற்றிய சிந்தனையே இல்லை: நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

kaleelrahman

லாட்டரி சீட்டை அறிமுகம் செய்து மாநில நிதி ஆதாரத்தை பெருக்கும் சிந்தனை திமுக அரசுக்கு இல்லை என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும், அதனை திமுக அரசு கைவிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் வகையிலும், கண்டனம் தெரிவித்தும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், லாட்டரி சீட்டை மீண்டும் திமுக அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டாம் என ஒரு பொய்யான அறிக்கையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். தமிழ்நாடு அரசின் ஆலோசனைகளிலோ, ஆய்வுக் கூட்டங்களிலோ ஒருமுறை கூட லாட்டரி பற்றிய பேச்சே எழவில்லை எனக் கூறியுள்ள அமைச்சர், நிதிப் பேரழிவில் மாநிலத்தை அதிமுக விட்டுச் சென்றாலும், மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே திமுக அரசுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு, ஆக்கப்பூர்வமான கருத்துகளை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். கற்பனைகளை அடிப்படையாக வைத்து திமுக அரசை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.