தமிழ்நாடு

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இல்லை: பொது சுகாதாரத்துறை

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இல்லை: பொது சுகாதாரத்துறை

webteam

சென்னையில் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் முதல்கட்ட ஆராய்ச்சி முடிந்துள்ளது. இரண்டாம் கட்டமாக மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. இதனிடையே, தடுப்பூசி செலுத்தப்பட்ட பிரேசிலைச் சேர்ந்த தன்னார்வலர் உயிரிழந்ததால், அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் எழுந்தது.

தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 65 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றிப் பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், "இதுவரை 65 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை யாருக்கும் எவ்வித பாதிப்பும் பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை" என்றார்.