தமிழ்நாடு

‘முட்டுக்காடு முதல் மாமல்லபுரம்’ - கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

‘முட்டுக்காடு முதல் மாமல்லபுரம்’ - கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை

Sinekadhara

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் ஈசிஆர் சாலையோரம் உள்ள சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் நடைபெறும். இதனால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கம். இந்தாண்டிற்கான, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விடுதி நிர்வாகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டு நிகழ்சிகள் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது. மாமல்லபுரம் தனியார் விடுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் உள்ள அனைத்து ஓட்டல், ரெஸ்டாரன்ட், பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய எஸ் பி கண்ணன் 31ஆம் தேதி மதியம் முதல் 1ஆம் தேதி வரை கிழக்குகடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க, சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்குபவர்கள் முன்பதிவு செய்து இரவு 10 மணிக்குள் அதற்கான ஆதாரங்களைக் காட்டினால் மட்டுமே மாமல்லபுரம் உள்ளே வரமுடியும். விடுதிகள் உள்ளேயும் கேளிக்கை நிகழ்சிகள் ஏதும் நடத்தக்கூடாது. வான வேடிக்கைகள் நடத்தக்கூடாது. கடற்கரையை ஒட்டிய விடுதிகளில் உள்ள பயணிகள் யாரும் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் விடுதிகள்மீது கடும் சட்ட நடவடிக்கைள் எடுக்கப்படும்” என எஸ்.பி தெரிவித்தார்.

கடற்கரையில் போலீஸார் வாகனங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்வர் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், ஆய்வாளர்கள் சுந்தரவடிவேல், முனிசேகர் மற்றும் ராஜாங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.