செய்தியாளர்: மருதுபாண்டி
அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களை மாவட்ட வாரியாக நடத்திட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உள்ளடக்கிய குழு அமைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட கள ஆய்வுக் குழு நிர்வாகிகளாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தலைமையில் நெல்லை மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வுக் கூட்டம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா பேசினார். அப்போது, "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு கீழ் தான் வாக்குகள் வாங்கியது. களப்பணி சரியாக இல்லை. நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது மற்ற நிர்வாகிகளை கலந்து பேசி தான் புதிய நிர்வாகிகளை நியமித்தேன். தற்போதைய மாவட்ட செயலாளர் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடக்கும்போது ஊரில் இல்லை. பொதுச் செயலாளரை சந்திக்க சென்றுவிட்டார்.
அவரை சந்திக்க சென்றது தவறு என சொல்லவில்லை. புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தபோது களத்தில் வட்ட செயலாளர் கூட இல்லாத நிலை இருந்தது என்பதை சுட்டிக் காட்டவே இதனை முன்வைக்கிறேன். 2026 ல் எடப்பாடியை முதல்வராக்க தினமும் ஒரு மணி நேரமாவது உழைக்க வேண்டும்” என தெரிவித்து தனது பேச்சை முடித்தார்.
அப்போது மேடையில் இருந்த மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் பாப்புலர் முத்தையா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில், மேடையில் இருந்த தற்போதைய மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா நேரடியாகவே பாப்புலர் முத்தையாவிடம் வாக்குவாதம் செய்தார். இந்த காட்சிகளை பார்த்தால் கணேஷ் ராஜா ஆதரவாளர் மேடையில் ஏறி பாப்புலர் முத்தையாவை நோக்கி சென்றதை பார்த்த கணேஷ் ராஜா அவரை தடுத்து மேடையில் இருந்து கீழே தள்ளினார். இதனை பார்த்த பாப்புலர் முத்தையா ஆதரவாளர்கள் மேடை அருகே சென்று கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதைப் பார்த்த வேலுமணி இரு தரப்பையும் சமரசம் செய்த போதிலும், சண்டை நிற்காமல் ஒருவருக்கொருவர் கீழே விழுந்து அடித்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சண்டையிடுவோர் வெளியே செல்லுங்கள் என உத்தரவிட்ட நிலையில், கைகலப்பு நின்றது. இதையடுத்து மேடையில் இருந்தவர்கள் பேசத்தொடங்கினர். கள ஆய்வுக் கூட்டத்தில் நடந்த கைகலப்பு பிரச்னை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.