தமிழ்நாடு

செல்போன் பயன்பாட்டை குறைப்பது உங்களுக்கும் வேலைக்கும் நல்லது: காவலர்களுக்கு அறிவுரை

செல்போன் பயன்பாட்டை குறைப்பது உங்களுக்கும் வேலைக்கும் நல்லது: காவலர்களுக்கு அறிவுரை

Sinekadhara

"செல்போன் பயன்பாட்டை நீங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். செல்போனை அதிகமாக பயன்படுத்துவது உங்களுக்கும் வேலைக்கும் கெடுதல்" என்று காவலர்களுக்கு நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கான யோகா பயிற்சி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

யோகா பயிற்சி முடிந்ததும் தலைமையேற்று நடத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உரையாற்றும்போது, "காக்கிச்சட்டை அணியும்போதே நிதானமும் சகிப்புத்தன்மையும் வந்துவிட வேண்டும். பிரச்னைக்காக செல்லுமிடத்தில் குற்றவாளியாக இருந்தாலும் அவர்களிடம் நீங்கள் சட்டரீதியாக அணுகுங்கள். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எந்த செயலிலும் இறங்கக்கூடாது.

அதுபோல் 'கூடா நட்பு கேடாய் முடியும்'... காவலர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனால் மன உளைச்சல், குடும்பத்தில் பிரச்னை, வேலையில் பொறுப்பின்மை எல்லாம் ஏற்படலாம். அதனால் நீங்கள் கூடா நட்பையும் உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்ப்பது நல்லது.

இந்த வேலைக்கு வருவதற்கு ஒவ்வொருவரும் மிகவும் கஷ்டப்பட்டு வந்திருப்போம். எத்தனையோ பேருக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. அதனால் இந்த வேலையை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியில் பொறியியல் படிப்பு படித்தவர்கள், எம் டெக், பி டெக், படித்தவர்கள் எல்லாம், மாதம் ரூ.20,000 சம்பளத்திற்காக வேலை தேடிக் கொண்டும், கஷ்டப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இங்கே எல்லோருக்கும் தங்குவதற்கும் அரசு வீடு கொடுத்துள்ளது. பெரும்பாலான சலுகைகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

பணிக்கு செல்லும் இடத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. இதனால் அருகில் என்ன நடந்தாலும் அதனை கவனிக்கும் எண்ணம் இருப்பதில்லை. செல்போன் என்பது ஒரு கருவி. பொழுதுபோக்கிற்காக அல்ல; பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம், அதற்கான நேரங்களில் மட்டும். ஆனால் அது தொடர்புகொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

செல்போன் பயன்பாட்டை நீங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுக்கும் கெடுதல். நீங்கள் பார்க்கும் பதவிக்கும் கெடுதல். செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது. வேலை மீதான ஈடுபாட்டை அதிகரித்து கொள்ளுங்கள். காவல்துறை என்பது ஒரு கட்டுப்பாடான குடும்பம். சில நேரங்களில் அதிகாரிகள் தவறு செய்யலாம். இல்லையென்றால் என்னவென்று விசாரணை செய்துகொள்ளலாம். அதனால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அதற்காக குடும்பத்தின் கட்டுப்பாட்டை குலைக்கும் நோக்கில் செயல்படுவது சரியல்ல. அனாவசியமாக பெட்டிஷன் போடுவது சரியல்ல. தேவையின்றி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். உண்மையான பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்களுக்கு மேலதிகாரி டிஎஸ்பி இருக்கிறார். அதற்கு மேலே எஸ்பி நான் இருக்கிறேன். அதற்கும் மேலே டிஐஜி, ஐஜி என அதிகாரிகள் உங்கள் குறைகளை கேட்பதற்காக இருக்கிறார்கள். உங்கள் குறைகள் தீர்க்கப்படும். அந்த நம்பிக்கையுடன் நீங்கள் வேலை பார்க்கலாம். இப்போது மிக அதிகமான காவல்துறையினர் சமூக வலைதளத்தை உங்களின் பணியில் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். இது கண்டிப்பாக கட்டுப்பாடான ஒழுங்குக்கு தவறான விஷயம். காவல்துறையினர் அனைவருமே கிடைக்கும் நேரத்தில் நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். கிடைக்கும்போதெல்லாம் ஓய்வு கிடைக்கும்போது நன்றாக உறங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன்.

- நாகராஜன்