தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப்போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைப்பெற்றது. இதனையடுத்து நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி வந்தடைந்தனர். உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரும் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் ஒருசில குடும்பத்தினர் விசாரணைக்கு ஆஜராகப்போவதில்லை எனவும், நேரடியாக தங்கள் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.